முதலமைச்சர் விக்னேஸ்வரன்கனடாவின் சர்வதேச மாநாட்டில்!

வடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச

மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர்.

15, 16, 17ம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில்,

வடமாகாண சுகாதார அமைச்சின் வேண்டுதலுக்கு அமைய கனடாவில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் மருத்துவர்கள் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து வடக்கு, கிழக்கு மகாணங்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் 15, 16, 17ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக 3 ஆண்டுகள் மூலோபாயத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்திருந்தோம். அத் திட்டம் 2016ம் ஆண்டு யூன் மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் மனித வளம், நிதி வளம் மற்றும் ஆலோசனை என பல விடயங்கள் தேவை. அத்துடன் சுகாதாரம் தொடர்பான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சின் பாரிய பங்கும் உள்ளது.

வடமாகாணத்தில் உள்ள போரின் பாதிப்புக்கள் உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படுவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாடாக இதை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இந்த மாநாட்டில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சர்கள் உள்ளிட்ட அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள், யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், கிழக்கு மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கனடா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து துறை சார் நிபுணர்கள், நிதி வழங்கும் அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளார்கள்.

குறிப்பாக வெளிநாட்டு பண உதவி மத்திய அரசின் ஊடாகத்தான் மாகாணத்துக்கு கிடைக்கும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

எனவே இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை கருதி மத்திய அரசின் பிரதிநிதிகளையும் இந்த மநாட்டுக்கு அழைப்பதாக இருந்த போதிலும் குறுகிய நாள் ஏற்பாடாக இருந்தபடியால் அதை செயற்படுத்தவில்லை.

இது தொடர்ச்சியான மாநாடாக உள்ள காரணத்தால் இந்த வருட இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் அவர்களை இணைக்கவுள்ளோம்.

இந்த மாநாட்டின் மூலம் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றை எந்த முறையில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்றும் பல திட்டங்களை அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் எமது திட்டங்களை மெருகூட்டுவதும் முன்னேற்றுவதற்கான நிதி மனித வலுவை கொண்டு வருதல், மேலதிக பயிற்சி ஆராய்ச்சி தொடர்பான விடயங்கள் எதிர்கால அபிவிருத்திக்கு வழிவகுக்கும் காரணிகள் தொடர்பாகவும் 16, 17ம் திகதிகளில் ஆராயவுள்ளோம்.

எதிர்வரும் 15ம் திகதி குறித்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வடமாகாண முதலமைச்சருக்கு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள வட கிழக்கில் உள்ள பிரதிநிதிகள் 14ம் திகதிக்கு முன்னர் கனடா நாட்டுக்கு பயணமாகவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*