சாலை விபத்து வழக்கு -வாசிம் அக்ரமுக்கு கைது வாரண்டு!

சாலை விபத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத

வாசிம் அக்ரமுக்கு ஜாமீனில் வெளியே வரக்கூடிய கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். சிறந்த இடது கை வேகப்பந்து வீரரான அவர் ஆல்ரவுண்டராகவும் ஜொலித்தார். தற்போது டெலிவி‌ஷன் வர்ணணையாளராக இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வாசிம் அக்ரம் சென்ற கார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அமினுர் ரகுமான் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கியால் சுட்டார். ஆனால் நல்லவேளையாக அவர் மீது படவில்லை. காரில்தான் குண்டு பாய்ந்தன.

சில நாட்கள் கழித்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். ஆனால் பகதூர்பாத் போலீஸ் நிலையம் இது குறித்து தானாக முன்வந்து வழக்குபதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கராச்சி கோர்ட்டில் நடந்த போது வாசிம் அக்ரம் 31 முறை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து வாசிம் அக்ரமுக்கு ஜாமீனில் வெளியே வரக்கூடிய கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அடுத்த கட்ட வழக்கு விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது அக்ரம் ஆஜராவதை உறுதிப்படுத்துமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.

வாசிம் அக்ரம் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் உள்ளார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடரை பார்ப்பதற்காக அவர் அங்கு சென்று உள்ளார்.

1992-ம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்ல வாசிம் அக்ரம் முக்கிய பங்கு வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*