ரசிகர்களின் கூட்டத்தை கண்டு உணர்ச்சி வசப்பட்ட டோனி !

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்

ரசிகர்களின் கூட்டத்தை கண்டு உணர்ச்சி வசப்பட்ட டோனி உங்களின் வருகையை பார்க்கும் போது, என் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து உள்ளர்கள் என்பதை உணர முடிகிறது’ என்று பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் டோனி. கடந்த வாரம் திடீரென ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். மூன்று வடிவிலான அணிக்கும் விராட் கோலி கேப்டன் ஆகியுள்ளார். டோனி இனி ஒரு விக்கெட் கீப்பராக மட்டும் அணியில் தொடருவார்.

இந்த நிலையில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி செயல்பட்டார். இந்திய அணிக்குரிய சீருடையில் டோனி கேப்டனாக அடியெடுத்து வைத்த கடைசி போட்டி இது என்பதால் அவரை உற்சாகப்படுத்த ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அதற்கு ஏற்ப கிரிக்கெட் வாரியமும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கி இருந்தது.

ரசிகர்களின் கூட்டத்தை கண்டு உணர்ச்சி வசப்பட்ட டோனி டாஸ் போடப்பட்ட போது பேசுகையில், ‘உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. 2007-ம் ஆண்டில் இருந்து நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள். இவ்வளவு ரசிகர்கள் வந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது பயிற்சி ஆட்டம் என்றாலும் கூட உங்களின் வருகையை பார்க்கும் போது, என் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து உள்ளர்கள் என்பதை உணர முடிகிறது’ என்றார்.

பயிற்சி ஆட்டத்தில் டோனியும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 8 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 68 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். டோனி பேட் செய்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார். டோனியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். உடனே டோனி, பிட்ச்சில் மிதித்து விடாதீர்கள் என்று அவரை பார்த்து கூறினார். அந்த ரசிகர் ஒரு ‘ஜம்ப்’ செய்து டோனியின் பக்கம் வந்தார். ஆசி பெறுவதற்காக குனிந்து டோனியின் கால்களை பிடித்தார். பிறகு போலீசார் அந்த ரசிகரை வெளியேற்றினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*