ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர்!

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும்

ஜனாதிபதி மீதும் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்களான நிலையில், இப்புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்குப் பெரிதாக எதுவும் கிடைத்ததாக கூறுவதற்கில்லை.

சில இடங்களில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய ஆட்சியில் காணி சுவீகரிப்பு மற்றும் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்துக்கான முயற்சிகள் காணப்படுகின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நீண்டகாலமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கபட்டாலும், இதுவரையில் எந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை இனப் பிரச்சினைக்கான தீர்வையோ அல்லது அதிகாரப் பகிர்வையோ நினைத்துப் பார்க்க முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர்கள் கூட முன்னுக்குப் பின் முராணான கருத்துகளைத் தெரிவிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பன தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளாக உள்ளன. இதற்கு எதிரான கருத்துகளை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளே அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து வருகின்றது என மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*