தீபா வருகை லாபமா நஷ்டமா? உளவுத்துறை அறிக்கை கேட்ட பன்னீர்?

எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போது அரசியல் பிரவேசத்தை அறிவிக்க உள்ளார்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ‘ உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் குறித்தும், அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கி உள்ளார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்” என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியாகின. ஆனால், கடந்த சில தினங்களாக ஊடகங்கள் தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன.

சசிகலா பின்னால் அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. “அம்மா தலைமையில் நல்லது நடக்கும் என்று தான் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார்கள் மக்கள். ஆனால், ஆறே மாதங்களில் அவர் இறந்துவிட்டார். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்தும் மக்களுக்கு விளக்கப்படவில்லை.

பொதுச் செயலாளராக சசிகலா இருக்கும்வரையில் அம்மா பற்றிய எந்த செய்தியும் வெளியில் வராது. அதுவே, தீபாவை முன்னிலைப்படுத்தினால், அம்மா மரணம் குறித்த விவரங்கள் வெளியில் வரும்’ என தொண்டர்கள் நம்புகின்றனர். இதனால் தான், ஜெயலலிதா மீதான பற்றுதலில் இருக்கும் பல கிராமங்கள், தற்போது தீபா பின்னால் அணிவகுக்கின்றன.

தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளை வைக்கின்றனர். ‘ நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான அவசியம் வந்தால் நிச்சயமாக அரசியலில் கால் பதிப்பேன்’ என தொடக்கத்தில் தீபா பேட்டியளித்தார். தற்போது அதற்கான சூழல் வந்துவிட்டன” என்று நெகிழ்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

இந்த நிலையில், தீபாவின் வருகை குறித்து உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு பெற்றார் முதல்வர் பன்னீர்செல்வம். ‘ தினம்தோறும் அவரை காண வருகின்றவர்கள் யார்? அவரை முன்னிலைப்படுத்துவது யார்? உண்மையில் அவரைப் பார்க்கத்தான் மக்கள் குவிகின்றனரா? மக்களின் மனநிலை என்னவாக உள்ளது? ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுகிறதா? அதிமுக நிர்வாகம் குறித்து ஏதேனும் கூறுகிறார்களா? தீபா அரசியலில் நுழைந்தால், அ.தி.மு.கவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? தீபாவை இயக்குவது யார் என்பது குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்தனர் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

பன்னீர் செலவத்திடம் அளித்த அறிக்கையில், ‘ தீபாவின் வளர்ச்சி உங்களுக்கு லாபம்?! உங்களுக்கு எதிராக நடப்பதற்கு எதுவும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளனர். கார்டன் தரப்பில் இருந்து உளவுத்துறை அதிகாரிகளிடம் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*